விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்

மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மும்பை 4 போட்டிகளில் ஒரு வெற்றியும், ஆர்சிபி 5 போட்டிகளில் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. ஆகையால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடினர்.

இன்றைய போட்டிக்கான பிட்ச், முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டதால், சிக்ஸர் மழை இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆர்சிபிக்கு எதிராக மும்பை அணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள்.

சரியான பார்மில் இருக்கும் விராட் கோலி, இப்போட்டியில் 3 (9) ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். தொடர்ந்து, மேக்ஸ்வெலும் 0 (4) டக்அவுட் ஆனதால், ஆர்சிபி அணி, பெரிய ஸ்கோர் அடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் டூ பிளஸி, ராஜத் படிதர் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, அரை சதம் அடித்தனர். படிதர் 26 பந்துகளில் 50 அடித்து, நடையைக் கட்டினார்.

படிதர் ஆட்டமிழந்த நிலையில், டூ பிளஸியும் 61 (40) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் பும்ரா வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், லாம்ரோர் 0 (1), சௌரப் சௌகான் 9 (8), விஜயகுமார் 0 (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து அதிரடி காட்டினார்.

ஆர்சிபி அணி 17 ஓவர்கள் முடிவில் 154/6 ரன்களை மட்டும் அடித்திருந்த நிலையில், அடுத்து தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, ஆகாஷ் மத்வாலின் கடைசி ஓவரில், இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை குவித்தார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 196/8 ரன்களை எடுத்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓபனர்கள் இஷான் கிஷன் 69 (34), ரோஹித் சர்மா 38 (24) ஆகியோர் அதிரடி காட்ட, இறுதிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 52 (19), ஹர்திக் 21 (6), திலக் வர்மா 16 (10) ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். இதனால், மும்பை அணி 15.3 ஓவர்களில் 199/3 ரன்களை குவித்து, அபார வெற்றியைப் பெற்றது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button