ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணியுடனான பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் 17ஆவது சீசன் 3ஆவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.
கொல்கத்தாவில் துவங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற சன் ஐரசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிட்ச் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கொல்கத்தா ஓபனர், பிலிப் சால் தலா 3 பவுண்டரி, சிக்ஸர் உட்பட 54 (40) ரன்களை அடித்தார். மற்றபடி, சுனில் நரைன் (2),வெங்கடேஷ் ஐயர் (7), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (0), நிதிஷ் ராணா (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களைதான் அடித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, ராமன்தீப் சிங் 35 (17), ரிங்கு சிங் 23 (15), ஆண்ட்ரே ரஸல் 64 (25) ஆகியோர் அதிரடி காட்டியதால், 7 ஓவர்களில் 51/4 என இருந்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 208/7 என ரன்களை குவித்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 32 ரன்களை அடித்தார்கள். இறுதிக் கட்டத்தில், ஹென்ட்ரி கிளாசின் 63 (29) மட்டுமே அதிரடி காட்டினார். இவருக்கு துணையாக, ஷாபஸ் அகமது 16 (5) சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில், 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், 19ஆவது ஓவரில், கிளாசன், ஷாபஸ் அகமது ஆகியோருக்கு எதிராக 4 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்தார். இதனால், ஆட்டம் சன் ரைசர்ஸ் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து, கடைசி ஓவரை வீசிய ஹர்ஷத் ராணா, முதல் பந்தில் சிக்ஸரை விட்டுக்கொடுத்தாலும், அடுத்து, 1, W, 1, W, 0 என அபாரமாக பந்துவீசியதால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 204/7 ரனகளை எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.