மசூதியின் சாரக்கட்டு இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
ஷார்ஜாவில் கட்டப்பட்டு வரும் மசூதியின் சாரக்கட்டு இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அல் கான் பகுதியில் நடந்ததாக ஷார்ஜா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஷார்ஜா காவல்துறை மற்றும் தேசிய ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்கள் இரவு 11 மணியளவில் போலீஸ் செயல்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மசூதியின் மினாரட்டில் தொழிலாளர்கள் வேலையில் மும்முரமாக இருந்தபோது, சாரக்கட்டு இடிந்து விழுந்து தொழிலாளர்கள் தரையில் விழுந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அவர்களில் 28 வயதுடைய உகாண்டாவை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நள்ளிரவு 12.10 மணியளவில் அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் நான்கு பேர் காயமடைந்தனர், அவர்களில் 3 பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நான்காவது தொழிலாளி உகாண்டாவைச் சேர்ந்தவர், 26 வயதான அவர் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சை முடிந்த பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.