அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி- காரணம் என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ந்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து, சொதப்பி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்றாவது போட்டியிலும் படுமோசமாக சொதப்பியது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக, மும்பை பேட்டர்கள் அபாரமாக செயல்படவில்லை.
இடது கை பௌலர் டிரெண்ட் போல்ட், அபாரமாக பந்துவீசி ரோஹித் சர்மா உட்பட முதல் மூன்று பேட்டர்கள் கோல்டன் டக் ஆக்கினார். இதனால்தான், மும்பை அணிக்கு துவக்கம் முதலே கடும் பின்னடைவு ஏற்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா இருவரும் சேர்த்து 30+ ரன்களை அடித்ததால்தான், மும்பை அணி 125 ரன்களை எட்டியது. இல்லையென்றால், 100 ரன்களை கூட தொட்டிருக்க முடியாது.
இதனைத் தொடர்ந்து, பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ஒரேயொரு நல்ல விஷயம் என்றால் அது ஆகாஷ் மத்வால்தான். வெறும் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
ரோஹித்திடம் இருந்து ஹர்திக்கிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தப் பிறகு, சர்ச்சைகள் தொடரும் நிலையில், மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து இருப்பது, அணியில் ஹர்திக் கேப்டன்ஸிக்கு ஒத்துழைப்பு இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆகாஷ் மத்வால், மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸிதான் என பேசியிருப்பது, விவாதப் பொருளாக மாறி உள்ளது.
பேட்டிகொடுத்த ஆகாஷ் மத்வால், ”ரோஹித், ஹர்திக், பும்ரா ஆகியோர் எனக்கு அவ்வபோது ஆலோசனை வழங்குவார்கள். ரோஹித் கேப்டன்ஸி வேறு, ஹர்திக் கேப்டன்ஸி வேறு. ரோஹித் கேப்டன்ஸியில் விளையாடிவிட்டு, தற்போது ஹர்திக் கேப்டன்ஸியில் ஆட இன்னமும் முழுமையாக தயாராகவில்லை. போகபோக ஹர்திக் கேப்டன்ஸிக்கு ஏற்ற மாதிரி விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.
அதாவது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியை இன்னமும் ஏற்க முடியவில்லை. அவரது கேப்டன்ஸி கடினமாக இருப்பதாக, மத்வால் மறைமுகமாக கூறியிருப்பதாக தெரிகிறது. முதல் மூன்று போட்டிகளில் தோற்க ஹர்திக் கேப்டன்ஸிதான் காரணம் என அவர் மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக, ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.