டி20 உலகக் கோப்பை: இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் போட்டியிட்டன.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கூட அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய இந்தியா 171 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பார்படோஸில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரீபியனில் பருவமழைக் காலம் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும், நாளையும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை முன்னறிவித்துள்ளது. மேலும், இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்று எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.