சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி
பேட்டர்களுக்கு சாதகமான பிட்ச் எனக் கருதப்பட்ட நிலையில், சன் ரைசர்ஸ் அணி சரியான திட்டத்தோடு பந்துவீசி சிஎஸ்கேவை சமாளித்தது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டர்களுக்கு சாதகமான மைதானத்தில், தொடர்ந்து வேகம் குறைந்த பந்துகளை போட்டு அசத்தினார்கள்.
சிஎஸ்கே ஓபனர்கள் ராசின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக, தடுப்பாட்டத்தில் ஆடிதான் ரன்களை சேர்க்க முடிந்தது. ரவீந்திரா 12 (9) ரன்களும், ருதுராஜ் 26 (21) ரன்களும் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, மிடில் வரிசை பேட்டர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஆனாலும், இவர்களை சமாளிக்க, சன் ரைசர்ஸ் பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீச ஆரம்பித்தனர்.
சன் ரைசர்ஸ் பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களைதான் வீசுவார்கள் எனத் தெரிந்தும், அதனை சிஎஸ்கே பேட்டர்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை. ரஹானே 35 (30), துபே 45 (24) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடைசி நேரத்தில், ரவீந்திர ஜடேஜா 31 (23) ரன்களை அடித்தார். 6ஆவது இடத்தில் விளையாடிய டேரில் மி்செல் 13 (11) படுமோசமாக சொதப்பினார். இறுதியில், சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 165/5 ரன்களை எடுத்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், முதல் மூன்று பேட்டர்கள் டிராவிஸ் ஹெட் 31 (24), அபிஷேக் சர்மா 37 (12), மார்க்கரம் 50 (36) ஆகியோர் அதிரடி காட்டினர். இறுதிக் கட்டத்தில், கிளாசின் 10 (11), நிதிஷ் ரெட்டி 14 (8) ஆகியோர் களத்தில் இருந்தபோது, சன் ரைசர்ஸ் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 166/4 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது.