IPL: KKR vs GT விஜய் சங்கர் அபார ஆட்டம்! கொல்கத்தாவை குஜராத் அணி வென்றது!

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் குஜராத் அணி பவுலர்களை இவர்கள் சோதித்தாலும் இந்த இணையை பிரிக்க முகமது சமி வந்தார். அப்போது அவர் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார் ஜெகதீசன். அவர் 15 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் டக் அவுட் ஆகி வெளியேற அடுத்து வெங்கடேஷ் ஐயரும் 14 பந்துகளைச் சந்தித்து 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் ரானாவும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இப்படி விக்கெட்டுகள் விழுந்துகொண்டு இருக்கையில் ரஸல் மட்டும் 19 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார் 3 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் இதில் அடங்கும்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 179 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர்களாக விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் அதிரடி காட்டத் துவங்கினர். ஆனால் விருதிமான் சஹா 10 பந்துகளைச் சந்தித்திருந்த போது ரஸல் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
சுப்மன் கில்லுடன் களமிறங்கிய பாண்ட்யா, அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். அவர் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்தார். அடுத்து தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் 35 பந்துகளைச் சந்தித்து 49 ரன்களை எடுத்திருந்த கில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். விஜய் சங்கருடன் அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அதிரடி காட்டத் துவங்கினார். அதைப் பார்த்து விஜய் சங்கரும் மறுபக்கம் அடிக்கத் துவங்கி 24 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்தார். டேவிட் மில்லர் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
18 ஓவர்களிலேயே வெற்றிக்கான ரன்களை எடுத்தது குஜராத் அணி. இதன்மூலம் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.