IPL 2024: ஒரு இன்னிங்ஸில் 22 சிக்ஸர்கள் அடித்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய சாதனை
IPL 2024-ன் 30ஆவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து அசத்தியது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அப்போது பேசிய சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் 240+ ரன்களை அடிப்போம் எனக் கூறினார்.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில், இன்று பேட்டர்கள் அபாரமாக செயல்பட முடியும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. சன் ரைசர்ஸ் அணியிலும் பவர் ஹிட்டர்ஸ் அதிகம் என்பதால், பெரிய ஸ்கோர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், ஓபனர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இதனால், பவர் பிளேவிலியே அந்த அணி 76 ரன்களை குவித்து அசத்தியது.
டிராவிஸ் ஹெட் ஒருபக்கம் அதிரடி காட்ட, அபிஷேக் சர்மா 34 (22) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து, ஹெட் உடன் கிளாசின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இவர்களது அதிரடியை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 102 ரன்களை குவித்து நடையைக் கட்ட, கிளாசனும் 31 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட 67 ரன்களை குவித்தார். இவர்களது அதிரடி காரணமாக, சன் ரைசர்ஸ் அணி 12 ஓவர்களிலேயே 150 ரன்களை எட்டியது.
இறுதியில் எய்டன் மார்க்கரம் 17 பந்துகளில் 32 ரன்களை அடிக்க, அப்துல் சமாத்தும் 10 பந்துகளில் 37 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 287/3 ரன்களை குவித்து வரலாறு படைத்தது.
287 ரன்களை குவித்த முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை படைத்த சன் ரைசர்ஸ் அணி, ஐபிஎலில் ஒரு இன்னிங்ஸில் 22 சிக்ஸர்களை அடித்த அணி என்ற சாதனையும் படைத்துள்ளது. இதற்குமுன், 2013-ல் புனே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 21 சிக்ஸர்களை அடித்ததுதான் சாதனையாக இருந்தது.