IPL 2024: ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வி
IPL 2024-ன் 36ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில், ஓபனர் பிலிப் சால்ட் தொடர்ந்து அதிரடியாக அடித்து, 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்களை குவித்து அசத்தினார்.
இருப்பினும், சுனில் நரைன் 10 (15), அங்கிரிஷ் 3 (4), வெங்கடேஷ் ஐயர் 16 (8) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், கொல்கத்தா அணியின் ஸ்கோர் 97/4 ஆக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கேப்டன் வெங்கடேஷ் ஐயர் 50 (36), ரிங்கு சிங் 24 (16), ரஸல் 27 (20), ராமன்தீப் சிங் 24 (9) ஆகியோர் அதிரடி காட்டியதால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 222/6 ரன்களை குவித்து அசத்தியது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆர்சிபி அணியில், ஓபனர்கள் விராட் கோலி 18 (7), கேப்டன் டூ பிளஸி 7 (7) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் நடையைக் கட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து, வில் ஜாக்ஸ் 55 (32), ராஜத் படிதர் 52 (23) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்து, அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரபுதேசாய் 24 (18), தினேஷ் கார்த்திக் 25 (18) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள்.
இறுதியில், கடைசி ஓவருக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஸ்டார்க்கிற்கு எதிராக முதல் 4 பந்தில், கரண் சர்மா 3 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். அடுத்த பந்தில் கரண் சர்மா ஆட்டமிழந்தப் பிறகு, கடைசி பந்தில் பெர்குசன் சிங்கில் மட்டுமே எடுத்ததால், ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 221/10 ரன்களை எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.
ஆர்சிபி அணி, முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். இதனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே, ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது.