IPL 2024: மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணி அபார வெற்றி
IPL 2024 லீக் சுற்றில் ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், ஓபனர் மயங்க் அகர்வால் 11 (13) சொதப்பிய நிலையில், அடுத்து ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடர்ந்து அதிரடியாக அடிக்க ஆரம்பித்தார்கள்.
இதனால், சன் ரைசர்ஸ் அணி, முதல் 6 ஓவர்களிலேயே 81/1 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, டிராவிஸ் ஹெட் 18 பந்துகளிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, 7ஆவது ஓவரில் சாவ்லாவுக்கு எதிராக அபிஷேக் மூன்று சிக்ஸர்களை அடித்ததால், சன் ரைசர்ஸ் அணி, 7 ஓவர்களில் 102/1 ரன்களை குவித்து வரலாறு படைத்தது.
ஹெட், அபிஷேக் அதிரடி காரணமாக, சன் ரைசர்ஸ் அணி, முதல் 10 ஓவர்களில் 148/2 ரன்களை குவித்து அசத்தியது. இந்நிலையில், ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களை எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து, அபிஷேக் சர்மா மற்றும் மார்க்கரம் இருவரும் அதிரடி காட்ட ஆரம்பித்தார்கள். இதனால், 11 ஓவர்களிலேயே, அந்த அணி 150 ரன்களை கடந்தது.
அபிஷேக் சர்மா 63 (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தப் பிறகு, எய்டன் மார்க்கரம் மற்றும் கிளாசின் இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். இவர்களது அதிரடியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
மார்க்கரம் 42 (28), கிளாசின் 80 (34) இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 277/3 ரன்களை குவித்து அசத்தினர். மும்பை அணியில் பும்ராவை தவிர அனைத்து பௌலர்களும், ஓவருக்கு 10+ ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ஓபனர்கள் ரோஹித் சர்மா 26 (12), இஷான் கிஷன் 34 (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து, நமன் தீர் 30 (14), திலக் வர்மா 64 (34) போன்றவர்களும் கடைசிவரை விளையாடவில்லை. இறுதிக் கட்டத்தில், ஹர்திக் பாண்டியா 24 (20), டிம் டேவிட்டும் 41 (21) வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை. இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 246/5 ரன்களை எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.