சினிமா

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மீண்டும் சிக்கலில்.. அனுமதி பெறாமல் குண்டுவெடிப்பு காட்சிகள்

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்காக “கேப்டன் மில்லர்” (Captain Miller) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விடுதலைக்கு முன்பாக 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. இந்த த்ரில்லர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான விடுதலை போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படத்தின் காட்சிகள் மற்றும் போர் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (கேஎம்டிஆர்) பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அதிக ஒளியிலான பீம் விளக்குகளை உபயோகப்படுத்துவது மற்றும் தீயை எரிப்பது மட்டுமல்லாமல், வெடிகுண்டு வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் படமாக்கி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தடை விதித்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் முறையான அனுமதி பெற்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவங்கியது.

இந்த நிலையில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் உரிய அனுமதி பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்படுவதாக அரிட்டாபட்டி பாதுகாப்புச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டும் படப்பிடிப்பு தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button