IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் போட்டியிட்டது.
இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி சாய் சுதர்சனின் அபாரமான அரைசதத்துடன் (96 ரன், 8 பவுண்டரி, 6 சிக்சர்) 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. பின்னர் சென்னை அணியின் பேட்டிங்கில் முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. மழை மற்றும் மோசமான அவுட்பீல்டு காரணமாக சுமார் 2½ மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு டிவான் கான்வே (47 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (26 ரன்), ரஹானே (27 ரன்), அம்பத்தி ராயுடு (19 ரன்) அதிரடியான பங்களிப்பை வழங்கி வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைத்தனர். என்றாலும் கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்ட நிலையில், மொகித் ஷர்மா வீசிய அந்த ஓவரில் முதல் 4 பந்தில் சென்னை பேட்ஸ்மேன்கள் 3 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. முடிவு என்ன ஆகுமோ? என்று ரசிகர்கள் பதற்றத்தோடு சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர்.
இப்படியொரு கடினமான நிலைமையில் 5-வது பந்தை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து இதயதுடிப்பை மேலும் எகிற வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடைசி பந்தை லெக்சைடு வாக்கில் சூப்பராக பவுண்டரிக்கு விரட்டிவிட்டு ஒரு வழியாக தித்திப்பாக முடித்து வைத்தார்.
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஷிவம் துபே (32 ரன்), ஜடேஜா (6 பந்தில் 15 ரன்) களத்தில் இருந்தனர்.