டைமண்ட் லீக் தடகள போட்டியில் 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதைதொடர்ந்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்றுள்ளார்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். அடுத்த 2 முறை தவறுதல் ஏற்பட்ட நிலையில் 4வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். 5வது முயற்சியிலும் தவறு ஏற்பட்டதால் நீரஜ் சோப்ரா பின்னடைவை அடைந்தார்.
பின்னர், இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார். போட்டி முடியும் வரை நீரஜ் சோப்ரா தனது 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.