பாதகமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பிய துபாய் காவல்துறை

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று காலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததை தொடர்ந்து, துபாயில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.
பாதகமான வானிலை குறித்து அனைவரையும் எச்சரிக்கும் வகையில் துபாய் காவல்துறை பொது பாதுகாப்பு ஆலோசனையை அனுப்பியுள்ளது.
பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் “பொதுமக்கள் கவனத்துடன் வாகனம் ஓட்டவும், அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவும், கடற்கரைகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும்” அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துபாய் காவல்துறையும் இன்ஸ்டாகிராமில் அவசர எச்சரிக்கையைப் பகிர்ந்துள்ளது:
நிலையற்ற வானிலை எமிரேட்ஸின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அபாயகரமான வானிலையை எதிர்பார்க்கபடுவதால் வெளியே செல்லும் போது கவனமாக இருக்குமாறும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

