கேரளா மாநிலத்தை புரட்டி போட்ட இயற்கை பேரழிவு… சோகத்தின் மேல் சோகம்!!

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அடுத்தடுத்து கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இதில், சுமார் 200 வீடுகள் மண்ணில் புதைகண்ட நிலையில் 1000 பேர் வரை சிக்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15்7ஆக அதிகரித்தது. 138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட உடல்கள், உடல் பாகங்கள் நிலம்பூரில் மீட்கப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட120-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 98 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்த பேரிழிவு ஏற்படுத்திய சோகமே இன்னும் நீங்காத நிலையில் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோழிக்கோடு விளாங்காட்டில் உள்ள வாணிமேல் பஞ்சாயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன, இரண்டு பாலங்கள் மற்றும் பல கடைகள் இடிந்து விழுந்தன. கோழிக்கோடு வடக்கு பகுதியில், குறிப்பாக வாணிமேல் பஞ்சாயத்து விளாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆதிச்சிப்பாரா, மஞ்சச்சள்ளி, குட்டல்லூர், பன்னியேரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு தொடர்ந்து 9 முறை நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழை காரணமாக மாஹே ஆற்றின் பிறப்பிடமான புல்லுவை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் ஆற்றங்கரையில் இருந்த 12 வீடுகள் இடிந்து விழுந்ததுடன், பல வாகனங்களும் சேதமடைந்தன. பல கடைகள் மற்றும் இரண்டு பாலங்கள் அழிக்கப்பட்டன, பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மின்சாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டம், குட்டிக்காடு மருதோன்கரா கிராமத்தின் பசுகடவ் பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, தெருக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடந்தாரா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், பரக்கண்டி, முக்கம், பீடிகப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.