ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சர்க்கரை விலை அதிகரிப்பு

உலகளாவிய விலை உயர்வு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சர்க்கரை விலை கடந்த இரண்டு மாதங்களில் எட்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் விலையை கட்டுக்குள் வைக்க இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு தடை பொருந்தாது. இந்த புதிய NCEL வரம்பின் கீழ், அரசாங்கம் விவசாயிகளை நேரடியாகக் கையாள்வதுடன், இடைத்தரகர்களின் தேவையை நீக்கி பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்தியா தனது சர்க்கரையை ஏற்றுமதி செய்யக்கூடிய NCEL -ன் கீழ் உள்ள நாடுகளின் பட்டியலில் UAE ஐயும் சேர்க்கலாம்.
அல் அடில் டிரேடிங்கின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் தனஞ்சய் தாதர் கூறுகையில், “சந்தையில் விற்கப்படும் தற்போதைய சர்க்கரை முக்கியமாக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூரில் சர்க்கரை விலை எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியச் சர்க்கரை உள்ளூர் சந்தைக்கு வந்தவுடன், விலை குறையும்” என்று கூறினார்.
உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர்களான இந்தியா மற்றும் தாய்லாந்தில் வழக்கத்திற்கு மாறாக வறண்ட காலநிலையால் அறுவடைகள் சேதம் அடைந்ததால், சர்க்கரை விலைகள் 2011 முதல் உலகளவில் மிக உயர்ந்த விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் உலகளாவிய சர்க்கரை உற்பத்தியில் 2 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்றும், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், சுமார் 3.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் இழப்பு ஏற்படும் என்றும் ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரம்பரியமாக பிரேசில், இந்தியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து வருகிறது.