தமிழக செய்திகள்உலக செய்திகள்

சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு; அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதனால் அந்நாட்டில் சிக்கி, தவித்து வரும் தமிழர்களை மீட்கும் பணி அரசின் உதவியுடன் நடந்து வருகிறது.

இந்த மீட்பு பணி பற்றி வெளிநாடு வாழ் தமிழர் நல துறைக்கான தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, இதுவரை சூடானில் வசித்து வந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 247 பேர் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

சூடானில் இருந்து மீட்டு வரப்பட்ட தமிழர்கள் 12 பேரை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் மும்பை டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்பு, அவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சூடானில் உள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவது தமிழக அரசின் பொறுப்பு என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டையில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் மே 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 7 நாட்களுக்கு அமலானது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன. சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

சூடானில் 4 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை மீட்கும்படி இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, உயர்மட்ட அளவிலான அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் விமானங்கள், கப்பல்களை அனுப்ப அரசு முடிவு செய்தது. இதன்படி, ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்கள் உள்ளிட்டவை மீட்பு பணிக்காக சென்று உள்ளன.

இந்த நிலையில், தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் ஜூபா நகரில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மோதலில் ஈடுபட்டு உள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

இதன்படி மே 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 7 நாட்கள் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதற்காக தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீர் மயார்தீத் உடன் இரு தரப்பினரும் தொலைபேசி வழியே ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த போர்நிறுத்த வாய்ப்பை பயன்படுத்தி சூடானில் உள்ள தங்களது குடிமக்களை, சொந்த நாட்டுக்கு திரும்பி அழைக்கும் பணியை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

Gulf News Tamil
#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button