ஏர் இந்தியா பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜின் அளவு குறைப்பு?
விமான பயணிகள் இனி 20 கிலோ எடை வரையே லக்கேஜாக எடுத்துச் செல்ல முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிகள் 30 கிலோ எடை வரை லக்கேஜ் கொண்டு செல்லும் வசதி இருந்து வந்தது. இந்நிலையில் இதனை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது மாற்றியமைத்துள்ளது. அதன்படி இனிமேல் இந்நிறுவன விமானத்தில் அதிகபட்சமாக 20 கிலோ வரை மட்டுமே உடைமைகளை கொண்டு செல்ல முடியும்.
அதனால் பயணத்திற்கு முன்பாக உடைமைகளின் எடை அளவை சோதனை செய்துகொள்ள பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், விமானப் பயணிகள் தற்போது எடுத்துச் செல்லும் இலவச லக்கேஜ் அனுமதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முன்பதிவுக்கான அறிவுறுத்தல்கள் மட்டுமே என்றும், சாதாரண பயணிகளுக்கான இலவச லக்கேஜ் அனுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
எனவே, இணையதளம், செல்போன் செயலி மற்றும் முன்பதிவு மையங்களில் விமானங்களுக்கு டிக்கெட் வாங்குவோர் இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏர் இந்தியா விளக்கியுள்ளது. குறிப்பாக, கட்டணமில்லாமல் இலவசமாக லக்கேஜ் எடுத்துச் செல்ல இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் 20 கிலோ வரையும், வளைகுடா நாடுகளில் இருந்து செல்லும்போது 30 கிலோ வரையும், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து 20 கிலோவும் அனுமதிக்கப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.