கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்பு.

கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்று கொண்டனர். பெங்களூரில் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் முதல்வருடன் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கர்நாடகா சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்பை பெற்றது. மற்ற கட்சிகள் முறையே பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள், சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் தேர்வு துவங்கியது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக சித்தராமையாவை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் மதியம் 12.30 மணிக்கு நடந்த விழாவில் பதவியேற்றனர். சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்க வேண்டும். யாருக்கெல்லாம் எந்த துறைகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் நேற்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்களுடன் அவர்கள் ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனையின்போது அமைச்சரவையில் 50:50 என்ற வகையில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கு இடம் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் தலா 10 பேருக்கும், கட்சி மேலிடத்தின் முடிவுப்படி 5 முதல் 8 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் 4 அமைச்சர்கள் பதவியிடங்களை காலியாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்குள் யாருக்காவது அதிருப்தி எழுந்தால் அவர்களை அமைச்சர்களாக நியமிக்கும் வகையில் இந்த பதவியிடங்கள் காலியாக வைக்கப்பட உள்ளன. தற்போது வரை புதிய அமைச்சர்கள் யார் யார்? என்ற விபரம் வெளியாகவில்லை. இதுபற்றிய விபரம் இன்று காலையில் வெளியானது.
அதன்படி இன்று காலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இதன்மூலம் இன்று முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் என மொத்தம் 10 பேர் பதவியேற்றனர்.



