காசாவில் பலஸ்தீனர்களின் மொத்த இறப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, காசாவில் பலஸ்தீனர்களின் மொத்த இறப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.
ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் இஸ்மாயில் அல்-தவப்தா வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், இறந்தவர்களில் 5,000 குழந்தைகளும் 3,300 பெண்களும் இருப்பதாகவும், 30,000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறினார்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 1,800 குழந்தைகள் உட்பட காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,750ஐத் தாண்டியுள்ளதாக அல்-தவாப்தா மேலும் கூறினார்.
அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது, இதில் ஹமாஸ் போராளிகள் சுமார் 1,200 பேரை கொன்றதுடன் 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்துள்ளனர்.