அபுதாபியின் எண்ணெய் அல்லாத பொருளாதாரம் 2023-ல் 9.1% உயர்வு

அபுதாபியின் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த ஆண்டு 9.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது பொருளாதார பல்வகைப்படுத்தல் மூலோபாயத்தின் நேர்மறையான முடிவுகளைக் காட்டுகிறது என்று அபுதாபி புள்ளியியல் மையம் (SCAD) தெரிவித்துள்ளது.
SCAD ன் GDP ஆரம்ப புள்ளி விவர மதிப்பீடுகளின் படி, எண்ணெய் அல்லாத பொருளாதாரத்தின் வலுவான செயல் திறன் 2022 உடன் ஒப்பிடும் போது 2023 ல் அபுதாபியின் மொத்த GDP ல் 3.1 சதவீதத்தை பங்களித்துள்ளது.
சவால்கள் மற்றும் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டில், எமிரேட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 10 ஆண்டுகளில் 1.14 டிரில்லியன் மதிப்பின் அடிப்படையில் அதன் சிறந்த செயல்திறனை அடைந்தது.
2023 ம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அபுதாபியின் பொருளாதாரம் 2022 ம் ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும் போது 4.1 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது, இது எண்ணெய் அல்லாத துறைகளின் விரிவாக்கத்தால் உந்தப்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.
தொழில்துறை, நிதி மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சியின் மூலம் பொருளாதார பன்முகத் தன்மையை ஊக்குவிப்பதன் மூலமும், புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக வெளிநாட்டு முதலீடு மற்றும் தனியார் துறையை ஊக்குவிப்பதன் மூலமும் வளர்ச்சி விகிதங்கள் பெரும்பாலும் அடையப்பட்டுள்ளன.