ரமலானில் பிச்சைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள், சட்டவிரோத தொழிலாளர்கள் 967 பேர் கைது
ரமலானில் “பிச்சை எடுப்பதற்கு எதிரான” பிரச்சாரத்தை தொடங்கியதில் இருந்து, துபாய் காவல் துறை 396 பிச்சைக்காரர்கள், 292 தெரு வியாபாரிகள் மற்றும் 279 சட்ட விரோத தொழிலாளர்களை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 99 சதவீதம் பேர் பிச்சை எடுப்பதை ஒரு ‘தொழிலாக’ பார்க்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
“பிச்சை எடுப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த துபாய் காவல் துறை எப்போதும் ஆர்வமாக உள்ளது, மேலும் புனித ரமலான் மற்றும் விடுமுறை நாட்களில் பிச்சைக்காரர்கள் மக்களிடம் அனுதாபம் தேடும் முயற்சியை கருத்தில் கொண்டு அதன் முயற்சிகளை தீவிரப்படுத்துகிறது” என்று பிரிகேடியர் அலி கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் துபாய் காவல்துறை 1,701 பிச்சைக்காரர்களை கைது செய்துள்ளது. 2023 ம் ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 500 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிச்சை எடுப்பது 5,000 திர்ஹம் அபராதம் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றமாகும். பிச்சை எடுக்கும் கும்பலை நடத்துவது அல்லது பிச்சை எடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆட்களை வரவழைப்பது, ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 100,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி நிதி திரட்டினால் 500,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.