வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கூடினால் 1,000 திர்ஹம் அபராதம்- அபுதாபி காவல்துறை

அபுதாபி: கனமழை மற்றும் மோசமான வானிலையின் போது பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. பள்ளத்தாக்குகள், பள்ளங்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கவும், மழை பெய்யும் போது மரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அபுதாபி காவல்துறை தனது சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவில், மோசமான வானிலையின் போது பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மழைக் காலங்களில் பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் கூடினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள்.
அவசர காலங்களில் போக்குவரத்து, ஆம்புலன்ஸ் அல்லது மீட்பு வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனம் பறிமுதல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.