பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த இஸ்ரேல் திட்டம்?

காசாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில், பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்த இஸ்ரேலின் கட்டுமானத் துறை விரும்புகிறது. போர் வெடித்ததில் இருந்து இத்துறையில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை நீக்குவதே இதன் நோக்கம்.
அறிக்கையின்படி, இந்தியர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை அனுமதிக்குமாறு இஸ்ரேலிய பில்டர்ஸ் அசோசியேஷன் தனது அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் நிறுவனங்கள் ஏன் இந்தியர்களை வேலைக்கு எடுக்க விரும்புகின்றன?
காசாவில் நடந்து வரும் போரினால் பாலஸ்தீனியர்கள் பணி அனுமதியை இழந்துள்ளதால் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. போர் வெடிப்பதற்கு முன்பு, சுமார் 90 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்தனர். இப்போது, பணி அனுமதிச் சீட்டு பிரச்னையால் அவர்களால் வேலை செய்ய முடியாது.
இந்தியா – இஸ்ரேல் ஒப்பந்தம்
மே மாதத்தில், இந்தியாவும் இஸ்ரேலும் 42,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் நர்சிங் துறைகளில் வேலை செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின்படி, கட்டுமானத் துறையில் 34,000 இந்தியத் தொழிலாளர்களும், நர்சிங் துறையில் 8,000 பேரும் பணியாற்றுவார்கள்.
இப்போது, போர் வெடித்த பிறகு எழுந்த தொழிலாளர் தொகுப்பில் உள்ள இடைவெளியை நிரப்ப இஸ்ரேலிய நிறுவனங்கள் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை விரும்புவதால், புதிய ஒப்பந்தம் தேவையா அல்லது ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் மாற்றம் தேவையா என்பதை பார்க்க வேண்டும்.