நவராத்திரியின் பின்னணி என்ன? எந்தெந்த படிகளில் என்னென்ன கொலு பொம்மைகள் வைக்கலாம்?

நவராத்திரி என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் துர்கா தேவியை வழிபடும் பண்டிகையாகும். இந்தியர்கள் இந்த பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகிறார்கள். மேலும், ‘நவ’ என்பதன் பொருள் ஒன்பது மற்றும் ‘ராத்திரி’ என்பது இரவைக் குறிக்கிறது. இவ்வாறு, ஒன்பது இரவுகளில் நாம் கொண்டாடுவதால், நவராத்திரி எனப் பெயர் பெற்றது.
நவராத்திரி உருவான கதை
கம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.
இவன் பிரம்மனை நினைத்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
இதனால் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். தேவர்களை காக்க சக்தி பெண்ணுருவம் பூண்டு பூமியில் பிறந்தார். தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.
இதை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.
எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் அமைக்கப்பட வேண்டும்?
நவராத்திரியின் போது ஒன்பது படிகளில் ஒன்பது விதமான பொம்மைகளை அடுக்கி வைப்பார்கள். 9 படிகளை மூட வெள்ளை துணியை விரிப்பது தான் நல்லது. அதில் மேலிருந்து முதல் படியில் கோவில்களில் வீற்றிருக்கும் மகா சக்தி பொருந்திய தெய்வங்களை அடுக்கி வைக்க வேண்டும். மும்மூர்த்திகளாக விளங்கும் மகா விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரை கட்டாயம் வைக்க வேண்டும். பின்னர் அவர்களுடன் கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் கொடுக்கும் முப்பெரும் தேவியர்களாக விளங்கும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் சிலைகளை வைக்க வேண்டும். பின்னர் ஆதிபராசக்தி ஆகிய உமையவளை நடுவில் வைத்து அவளின் அருளாசியை பெற்றுக் கொள்ளலாம்.
எட்டாவது படியில் தசாவதாரங்களை உணர்த்தும் விதமாக தசாவதார சிலைகளை அடுக்கி வைக்கலாம் அல்லது நவ கிரகங்களில் வீற்றிருக்கும் நவகிரக நாயகர்களை அடுக்கி வைக்கலாம். தேவர்கள், தேவதைகள், அட்டதிக்கு பாலகர்கள் போன்றவர்களையும் அடுக்கி வைக்கலாம்.
ஏழாவது படியில் அரசாண்ட மன்னாதி மன்னர்கள், குருமார்கள் போன்றவர்களை இடம் பெற செய்யலாம் அல்லது முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மனித உருவில் வாழ்ந்து மறைந்த தெய்வங்கள் ஆகியோரின் திரு உருவ சிலைகளை அடுக்கி வைத்து அழகு பார்க்கலாம்.

ஆறாவது படி மட்டும் எப்பொழுது நமக்கு உரியது. ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உரியது. அதாவது மனிதர்களை சித்தரிக்கும் விதமாக குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்க செய்யக்கூடிய வகையில் செட்டியார் பொம்மை, தலையாட்டி பொம்மை, அரிசி பருப்பு விற்கும் வியாபாரி, நெசவாளி, விவசாயி போன்ற மனித பொம்மைகளை வைக்கலாம்.
ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட பறவைகள், மிருகங்கள் போன்ற உயிரினங்களின் பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
நான்காவது படியில் நான்கறிவு ஜீவன் கொண்ட நீர்வாழ் உயிரினங்களின் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.
மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட ஊர்வன உயிரினங்களாக இருக்கும் எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.
இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட உயிரினங்கள் ஆகிய நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.
முதல் படியில் இறுதியாக ஓரறிவு கொண்டுள்ள மரம், செடி, கொடிகள், புல் வகைகள் போன்ற விஷயங்களை அலங்காரங்களாக செய்து வைக்கலாம்.
முதல் படியிலிருந்து ஒன்பதாவது படி வரை இம்முறையில் அடக்கி வைப்பதற்கு தத்துவ காரணம் ஒன்று தான். மனிதன் புல், பூண்டு முதலான ஓரறிவுள்ள விஷயங்கள் முதல் தன் அறிவால் கற்றுக் கொண்டு படிப்படியாக ஒன்பதாம் படியில் இறைவனை அடைகிறான் என்பது தான் இதன் பொருள்.