ஜவான் ( Jawan ): அட்லீயின் தழுவல் கதையா?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும், ஜவானின் கதை என்ன என்பது தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது மட்டுமே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இது முன்னதாக வெளியான சில போஸ்டர்கள் மற்றும் தகவல்களிலும் கசிந்தன. ஜவான் படத்தைப் பற்றிய வேறெந்த தகவலும் படக்குழுவிடமிருந்து வெளியாகவில்லை. ஆனால் , படப்பிடிப்பு நடந்த இடங்கள் மற்றும் சாத்தியமான தகவல்கள் குறித்து ஊடகங்களில் பல ஊகங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
படக்குழுவுக்கு நெருக்கமான நபர்கள் கசியவிட்டுள்ள ஆதாரங்களின்படி, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் கதை உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி என்ற தமிழ் திரைப்படத்தின் கதைதான் என்கிறார்கள். ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார். அந்த படத்தில் தந்தை மற்றும் மகன் என நடிப்பில் அசத்தியிருந்தார் கமல்ஹாசன். அதே போல் அந்த படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஜவானிலும் ஷாருக் கான் தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு கைதியின் டைரி போல ஜவானும் ஒரு பழிவாங்கும் படம்.
அட்லீ மீது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது பழைய படங்களின் கதையை உரிமை பெறாமலே ரீமேக் செய்கிறார் என்பதுதான். அது அட்லீயை ரசிக்காதவர்களை குதூகலக்கச் செய்தாலும் இது முறையல்ல என்பதை ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். கமல்ஹாசனின் படக் கதையைத் தழுவி அட்லீ படமெடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுக்க அதை பாராட்டும்போது மறைமுகமாக காட்டிவிட்டார் கமல்ஹாசன்.