எத்தியோப்பியாவில் மரம் நடவு செய்த எமிரேட்ஸ் தலைவர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எமிரேட்ஸ் தலைவர், இருதரப்பு பிணைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸும் எத்தியோப்பியாவும் காலநிலை சவால்களை சமாளித்து, 2050க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவது குறித்தும் விவாதித்தனர். அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பிய பிரதமர் அலுவலகத் தோட்டத்தில் மரம் நடும் எளிய செயலின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 12, 2023 வரை எக்ஸ்போ சிட்டி துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) 28வது மாநாட்டில் (COP28) பங்கேற்க எத்தியோப்பியா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
காலநிலை சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளைத் தேடுவதில் சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஷேக் முகமது வலியுறுத்தினார்.