நிலையற்ற வானிலை: புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையம் செல்லுங்கள்

செவ்வாய், புதன் கிழமைகளில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் விமான அட்டவணையில் பாதிப்பு ஏற்படலாம். நிலையற்ற வானிலை காரணமாக துபாய் இன்டர்நேஷனல் (DXB) விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமானங்களின் அட்டவணை பாதிக்கபடலாம் என்று ஒரு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருவதை இலக்காகக் கொள்ளுமாறு பயணிகளுக்கு Flydubai அறிவுறுத்தியுள்ளது.
திங்கள்கிழமை பிற்பகல் முதல் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வழங்கிய அறிவுரையின் படி, கனமழை வெள்ளத்தை ஏற்படுத்தும், அதே நேரத்தில் பலத்த காற்று கிடைமட்ட பார்வையை குறைக்கும். இந்த மோசமான வானிலை புதன்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் பயண அட்டவணையில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதைக் குறைக்கச் செயல்படுவதாக Flydubai தெரிவித்துள்ளது. “நாங்கள் தொடர்ந்து வானிலை நிலையை உன்னிப்பாகக் கண்காணிப்போம்” என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
விமான நிலையத்திற்கு தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்கவும் மற்றும் அதன் வலைத்தளத்தில் தங்கள் விமானத்தின் நிலையை சரிபார்க்கவும் கேரியர் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.