உலகம் ஒரு கண்ணாடி – நாம் எப்படியோ உலகமும் அப்படியே
நீங்கள் உலகத்தை எப்படி பார்க்கிறீர்களோ, உலகமும் உங்களை அப்படியே பார்க்கும்

ஒரு சமயம் ஞானி ஒருவர்,அவர் தனது கிராமத்தின் எல்லை புறத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
ஒரு வழிப்போக்கன் அந்த பக்கம் வந்து கொண்டிருந்தான்.
அவன் அந்த ஞானியை பார்த்து, இந்த கிராமத்தில் எந்த மாதிரியான மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்றும்
நான் இப்போது இங்கிருக்கும் கிராமத்திலிருந்து குடிபெயர ஓரிடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான்.
இதைக் கேட்ட அந்த ஞானியோ! நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் என்ன மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்த வழிப்போக்கன்! அவர்கள் எல்லோரும் சின்ன புத்திகாரர்கள், கொடுமையானவர்கள், மூடர்கள் என்று சொன்னான்.
இதைக் கேட்ட ஞானியோ! அதே வகையான மக்களே இந்த கிராமத்திலும் வாழ்கிறார்கள் என்று பதில் அளித்தார்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு வழிப்போக்கன் அந்த ஞானியிடம் வந்தான்.
அந்த வழிப்போக்கனும் ஞானியிடம் அதே மாதிரியான கேள்விகளே கேட்டான்.
அதற்கு ஞானியோ! நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் எந்த மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள்? என்று அவனிடம் கேட்டார்.
அதற்கு அந்த வழிப்போக்கன்! இங்கே இருக்கிற மக்கள் மிகவும் அன்பானவர்கள், அடக்கமானவர்கள், பண்புடையவர்கள், நல்லவர்கள், என்று பதில் அளித்தான்.
இதைக் கேட்ட ஞானியோ! நீங்கள் இங்கேயும் கூட அதே மாதிரியான மக்களைத்தான் பார்ப்பீர்கள் என்று சொன்னார்.
இந்தக் கதையின் நீதி என்ன?
பொதுவாக நாம், இந்த உலகை அது எப்படி இருக்கிறதோ அப்படி பார்க்காமல்,
நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே பார்க்கிறோம். பெரும்பாலான சமயம் நமது சொந்த நடத்தைக்கு கிடைக்கும் பதிலாகவே பிறருடைய நடத்தையும் இருக்கும்.
ஆம், பிரியமானவர்களே! உங்கள் வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து, நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கும். நீங்கள் அழுதால் அதுவும் அழுகும். நீங்கள் முறைத்தால் அது முறைக்கும். நீங்கள் முகம் சுழித்தால் அதுவும் முகம் சுழிக்கும்.
ஆம்! இந்த உலகமும் ஒரு கண்ணாடி போன்றதே! ஆகையால், இந்த உலகம் என்கிற கண்ணாடியில் நாம் எதைப் பிரதிபலிக்கிறோமோ, அதுவும் அதே காரியத்தை பிரதிபலிக்கும்.



