படித்ததில் பிடித்தது

பேச்சின் அடையாளம்: துறவியும் மன்னனின் அத்தாட்சியும்

உங்கள் பேச்சு உங்கள் அடையாளம்: துறவி உணர்த்திய விவேகம்

மன்னன் ஒருவன் தனது மந்திரியுடனும் சேவகனுடனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். நடுக்காட்டில் அவர்கள் மூவரும் தனித்தனியே பிரிந்து விட்டார்கள்.

ஒரு துறவியின் ஆசிரமம் அந்தக் காட்டில் இருந்தது. அதில் ஒரு துறவி கண்களை மூடித் தவம் செய்து கொண்டிருந்தார்; அவருக்கு இரண்டு கண்களும் தெரியாது.

ஆசிரமத்தின் பக்கம் முதலில் வந்த சேவகன், ‘ஏய் சந்நியாசி! இந்தப் பக்கம் மன்னன் வந்தானா’ என்று உரத்த குரலில் கேட்டதும், துறவி, ‘இல்லை’ என்று பதில் தந்தார்.

சிறிது நேரம் கழித்து மந்திரி அங்கே வந்து, ‘அப்பா சந்நியாசி இந்தப் பக்கம் மன்னர் வந்தாரா’ என்று பணிவாகக் கேட்டதும் துறவி ‘இல்லை, சேவகன்தான் போனான்’ என்று பதில் அளித்தார்.

இன்னும் சிறிது நேரம் கழித்து மன்னன் அந்த இடத்திற்கு வந்து, ‘துறவியாரே இந்தப் பக்கமாக யாராவது சென்றார்களா, ஏதாவது கூறினார்களா’ என்று மதிப்போடும், மரியாதையோடும் வினவினான்.

அதற்கு, ‘மகாராஜா முதலில் உங்கள் சேவகன் வந்தான். பின்பு மந்திரி வந்தார்’ என்று கூறினார் துறவி. மன்னன் போய் விட்டான்.

கடைசியில் மன்னன், மந்திரி, சேவகன் மூவரும் ஓர் இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ‘கண் தெரியாத துறவிக்குச் சேவகன், மந்திரி, மன்னன் என்று எப்படி அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்” என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. துறவியிடமே போய்க் கேட்டார்கள்.

துறவி மன்னனிடம், ”ஒவ்வொருவரும் என்னைக் கேட்ட கேள்வியின் தோரணையை வைத்து அவர்களின் பதவியைக் கணிக்க முடிந்தது” என்று கூறியதும், மற்ற இருவர் சார்பாக மன்னன் மன்னிப்பு கேட்டு, தான் ஒரு ‘மாமன்னன்’ என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்தான்.

எனவே நண்பர்களே, பேசுங்கள்; ஆனால், பேசுவதற்கு முன்பாக ஒரு கணம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று நன்றாக, நிதானமாக, எண்ணிப் பார்த்து விட்டுப் பிறகு பேசுங்கள்.

ஏனென்றால் உங்கள் பேச்சு உங்களை இன்னார் என்று அடையாளம் காட்டி விடும்; ஆளுமைப் பண்பைக் குறிப்பாகப் புலப்படுத்தி விடும்…

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button