படித்ததில் பிடித்ததுஇந்தியா செய்திகள்

சின்ன சின்ன பாட்டி வைத்தியம்: வீட்டிலேயே செய்யலாம் இயற்கை மருத்துவங்கள்

சமையலறையிலேயே இருக்கும் பொருட்களால் செய்யக்கூடிய எளிய இயற்கை வைத்தியங்கள்

பாட்டி வைத்தியம் – சின்ன, சின்ன வைத்தியங்கள்

நம் முன்னோர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவர்கள். அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட சிறிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு, அவர்கள் சமையலறையிலேயே கிடைக்கும் மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி எளிய வைத்திய முறைகளைப் பின்பற்றினர். இந்த அனுபவ அறிவு தலைமுறைகள் கடந்தும் “பாட்டி வைத்தியம்” என்ற பெயரில் நமக்குக் கிடைத்துள்ளது.

இன்றைய வேகமான வாழ்க்கையில், சின்னச் சின்ன உடல்நலக் குறைகளுக்கே மருந்து தேடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஆனால், நம் வீட்டிலேயே இருக்கும் துளசி, இஞ்சி, சுக்கு, வெந்தயம் போன்ற இயற்கை பொருட்கள் பல நோய்களுக்கு சிறந்த நிவாரணமாக பயன்படுகின்றன.

பாட்டி வைத்தியம் என்பது வெறும் மருந்து அல்ல; அது இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான வாழ்வியலின் ஒரு பகுதி. நெஞ்சு சளி, தலைவலி, அஜீரணம், சரும பிரச்சினைகள் போன்ற பல பொதுவான உடல்நலக் குறைகளை எளிய முறையில் சரி செய்ய உதவும் பாரம்பரிய வைத்திய குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இவற்றை முறையாகப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, இயற்கையான வாழ்க்கை முறைக்கு நாம் மீண்டும் திரும்ப முடியும்.

 1.⁠ ⁠நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

 2.⁠ ⁠தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

 3.⁠ ⁠தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

 4.⁠ ⁠தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

 5.⁠ ⁠அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

 6.⁠ ⁠வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

 7.⁠ ⁠வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

 8.⁠ ⁠சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

 9.⁠ ⁠மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10.⁠ ⁠கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11.⁠ ⁠வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12.⁠ ⁠பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13.⁠ ⁠வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14.⁠ ⁠தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15.⁠ ⁠வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16.⁠ ⁠அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17.⁠ ⁠இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18.⁠ ⁠வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19.⁠ ⁠உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20.⁠ ⁠ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21.⁠ ⁠கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22.⁠ ⁠மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

பாட்டி வைத்தியம் என்பது நம் பாரம்பரிய அறிவின் பொக்கிஷம். சமையலறையில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டு உடல்நலக் குறைகளை இயற்கையாக சரி செய்யும் இந்த முறைகள், உடலுக்கு தீங்கில்லாமல் நன்மை தருகின்றன.

சின்னச் சின்ன உடல் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாட்டி வைத்தியம் உதவுகின்றன. இருப்பினும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

இயற்கையை நம்பி, ஆரோக்கியமாக வாழ்வோம்!

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button