ரமலான் மாதத்தில் அபுதாபியில் போக்குவரத்து சேவைகள் இயங்கும் நேரம் அறிவிப்பு
அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ரம்ஜான் மாதத்தில், தர்ப் போக்குவரத்து கட்டண முறைக்கான திருத்தப்பட்ட உச்ச நேரங்களில் அதாவது, திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டோல் கேட்டை கடக்க கட்டணம் கிடையாது.
வாகன நிறுத்துமிடம்
ரமலான் மாதத்தில் பொது வாகன நிறுத்த சேவைகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பொது பார்க்கிங் கட்டணம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொருந்தும். ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம்.
பேருந்துகள்
அபுதாபி நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ரம்ஜான் மாதத்தில் பொதுப் பேருந்து சேவைகள் வாரம் முழுவதும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும் என்றும், 24 மணி நேரமும் இயங்கும் பேருந்து சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்றும் ஐடிசி தெரிவித்துள்ளது.
அல் ஐன் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், பொதுப் பேருந்துகள் ரமலான் மாதத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். பெரும்பாலான புறநகர் சேவைகள் மாறாமல் இருக்கும், அதே நேரத்தில் அல் ஐன் நகருக்குள் சில சேவைகளில் சிறிது மாற்றம் இருக்கும்.
அபுதாபி எக்ஸ்பிரஸ் சேவையைப் பொறுத்தவரை, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதியில் காலை 6 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும் (அடுத்த நாள்) செயல்படும்.