ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும்

ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அதிபராக பதவியேற்றுள்ள ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது மொக்பர், நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி-எஜே மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் தேதி தீர்மானிக்கப்பட்டது.
ஈரானின் அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், முதல் துணை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்திற்கு தலைமை தாங்குவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார்
கூட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் தேர்தல் செயல்முறைகளுக்கான அட்டவணையை அமைத்தனர், இதில் நிர்வாக பிரதிநிதிகள் உருவாக்கம், வேட்பாளர்களை பதிவு செய்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்குதல் ஆகியவை அடங்கும் என்று IRNA தெரிவித்துள்ளது.