எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி
செக் குடியரசின் பார்டுபிஸ் நகரில் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ப்ராக் நகரில் இருந்து 300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் உக்ரைன் நகரான சோப் நகருக்கு இரவோடு இரவாக சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் கால்சியம் கார்பைடு என்ற காஸ்டிக் மற்றும் எரியக்கூடிய ரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலுடன் மோதியது.
தலைநகர் ப்ராக் நகரிலிருந்து கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்டுபிஸில் உள்ள பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்து நடந்தது.
காயமடைந்த 26 பேருக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக உள்ளூர் அவசர சேவை செய்தித் தொடர்பாளர் அலெனா கிசியாலா, AFPயிடம் தெரிவித்தார்.
“அவர்களில் நான்கு பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
உயிரிழந்தவர்களில் இரண்டு உக்ரைன் பெண்களும் அடங்குவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான காயங்கள் லேசானவை என உள்துறை அமைச்சர் விட் ரகுசன் தெரிவித்தார்.
ஒன்பது ஆம்புலன்ஸ்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் மார்ட்டின் குப்கா தெரிவித்தார்.