COP28: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விமானப் போக்குவரத்து 10 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தின் நீண்ட வார இறுதி மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு 2023-ன் 28 வது பதிப்பின்(COP28) தொடக்கத்தின் காரணமாக வரும் நாட்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பார்வையாளர்களின் வருகை மற்றும் விமானப் போக்குவரத்து 10 சதவிகிதம் அதிகரிக்கும். மாநாட்டை முன்னிட்டு துபாயில் 70,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் வணிக நிர்வாகிகள் வந்து இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை இயங்கும் COP28, இந்த ஆண்டுக்கான தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உலகின் மிகப்பெரிய கூட்டமாகும். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், போப் பிரான்சிஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வார் உல் ஹக் கக்கர் மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் உட்பட 140 க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52வது தேசிய தின கொண்டாட்டங்கள் மற்றும் மாநாட்டின் ஆரம்ப நாட்களில் விமானப் போக்குவரத்து ஓட்டம் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாட்டுத் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் பலர் உட்பட 70,000 க்கும் மேற்பட்ட மாநாட்டு பங்கேற்பாளர்களை நாடு வழிநடத்தும் என்று பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (ஜிசிஏஏ) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.