ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு

India:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் குஜராத்தில் தரையிறங்கியதையடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை வரவேற்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டின் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வந்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருக்கு அன்பான வரவேற்பு அளித்த பிறகு, பிரதமர் மோடி, “எனது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை இந்தியாவுக்கு வரவேற்கிறோம். நீங்கள் எங்களைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியும் தனக்கு கிடைத்த அன்பான வரவேற்பைப் பற்றி X -ல் அரபு, ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதிவிட்டுள்ளார்.
“இரு நாடுகளையும் இணைக்கும் வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் இன்று நான் சந்தித்தேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து செழித்து வருகிறது, இன்று நமது பேச்சுக்கள் பொருளாதாரத்தை ஆதரிக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்தன” என்று கூறியுள்ளார்.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின்படி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பூங்காக்கள் ஆகிய துறைகளில் இரு தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.