52வது தேசிய தினம்: தனியார் துறை ஊழியர்களுக்கு கூடுதல் நாள் விடுமுறை அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தை(52nd National Day) கொண்டாடும் வகையில் தனியார் துறை ஊழியர்களுக்கு கூடுதல் நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு மூன்று நாள் வார இறுதி விடுமுறையை தந்துள்ளது.
தேசிய தினத்தை முன்னிட்டு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் முன்பு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்று முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அமைச்சகம் டிசம்பர் 2, 3 மற்றும் 4 (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய தினங்கள் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தேசிய தினத்திற்கு இதேபோன்று விடுமுறை கிடைக்கும். மத்திய அரசு உட்பட நாடு முழுவதும் உள்ள மனிதவள அதிகாரிகள் டிசம்பர் 2 முதல் 4 வரை பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். அவர்கள் விடுமுறைக்கு முந்தைய நாள் – வெள்ளி, டிசம்பர் 1 அன்று தொலைதூரத்தில் வேலை செய்வார்கள். அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை அலுவலகத்திற்குத் திரும்புவார்கள்.
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விடுமுறைக் கொள்கையானது அனைத்து ஊழியர்களும் ஆண்டு முழுவதும் சம எண்ணிக்கையிலான இடைவெளிகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1971 ஆம் ஆண்டில் அனைத்து எமிரேட்களும் ஒன்றிணைந்ததைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதியை தேசிய தினமாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு நாடு 52 வது வயதை எட்டுகிறது.