தமிழக செய்திகள்

1000 ஆண்டுகள் கோயில்களில் 40 கோயில் ரூ.21 கோடியில் புனரமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

1000 years Temples will be renovated – Minister Said in Legislate.

தமிழ்நாட்டில் ரூ.250 கோடியில் 698 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 கோயில்களில் ரூ.21 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு ஆற்றிய உரை; “ஒருவர் சாதனையை ஒருவர் முறியடிக்கலாம். நம் முதல்வரின் சாதனையோ முறியடிக்கவே முடியாத சாதனை. அவர் அறநிலையத்துறைக்கு மட்டும் ஆற்றிய சாதனையை அறிவிப்பதென்றால், ஒரு மணி நேரம் அல்ல ஒரு நாள் அல்ல ஒரு வாரம் கூட போதாது. இம்மாமன்றம் எனக்கு ஒதுக்கிய நேரத்திற்குள் நான் சிலவற்றை எடுத்துரைக்கிறேன்.

  1. திருக்குட நன்னீராட்டு பெருவிழா: சமயக்குரவர் நால்வர் நடத்திய சமயப்புரட்சி போல் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை 632 திருக்கோயில்களுக்கு ரூ.128 கோடி மதிப்பீட்டில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இவற்றுள் 100 ஆண்டுகளைக் கடந்த 8 கோயில்களும் உண்டு, 400 ஆண்டுகளைக் கடந்த 1 கோயிலும் உண்டு. இது போன்ற திருப்பணிகளும், குடமுழுக்குகளும் நடத்துவதில் ஒன்றிய அளவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  2. ஒருகால பூஜை திட்டம்: ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட வைப்பு நிதி ரூ.1 லட்சம். ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.130 கோடியை மானியமாக வழங்கியது நம் அரசு. கூடுதலாக 2,000 திருக்கோயில்களுக்கு ரூ.40 கோடியை மானியமாக வழங்கியது நம் அரசு. இத்திருக்கோயில்களின் 15,000 அர்ச்சகர்கள் நலன் காக்க மாதம் 1,000 ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கி வருகிறது நம் அரசு. இத்திருக்கோயில்களின் மின் கட்டண செலவு ஆண்டிற்கு 6 கோடி ரூபாயை துறையே ஏற்றுள்ளது. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என நினைத்த தாயுமானவரின் ஆன்மிகமே நம் முதல்வரின் ஆன்மிகம்.

3.மன்னராட்சியில் வழங்கப்பட்ட மானியம் மக்களாட்சியிலும் தொடர்கிறது.
i.கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களுக்கு அரசு மானியம் ரூ.3 கோடியாக இருந்ததை ரூ.6 கோடியாக உயர்த்தியவர்.
ii.புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களுக்கு அரசு மானியம் ரூ.1 கோடியாக இருந்ததை ரூ.3 கோடியாக உயர்த்தியவர்.
iii.தஞ்சை அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களுக்கு முதன் முதலாக ரூ.3 கோடியை மானியமாக வழங்கியவர் மக்களாட்சியின் மன்னர் நம் முதல்வர்.

“திட்டம் ஒன்று, பலன்கள் பல” என்று புது இலக்கணத்தை வகுத்திருக்கிறார் நம் முதல்வர். தாழ கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்று சொன்ன அய்யா வைகுண்டரின் மறு வடிவே எங்கள் முதல்வர்.

4.1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களை புனரமைக்க 100 கோடி.
தொன்மையான ஆலயங்கள் நம் ஆதி பண்பாட்டின் அடையாளங்கள், 1,000 ஆண்டுகளுக்கு மேலான 714 திருக்கோயில்களை புனரமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் வழங்கினார். 47 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 35 கோடி ரூபாய் செலவில் 66 திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் திருப்பணி மேற்கொள்கின்றனர்.இந்த திருப்பணிகளின் வேகத்தை பார்த்தால், 714 திருக்கோயில்களிலும் 5 ஆண்டுகளில் இத்திருப்பணிகள் நிறைவுறும் போது இது ஒரு இமாலய சாதனை என்று அனைவராலும் போற்றப்படும்.

இத்திருப்பணிகளால்,
பராந்தக சோழன்,
விக்ரம சோழன்,
இராஜ ராஜ சோழன்,
இராஜேந்திர சோழன்,
குலோத்துங்க சோழன்,
மகேந்திரவர்ம பல்லவன்,
நரசிம்ம வர்ம பல்லவன்,
சுந்தரபாண்டியன்,
போன்ற மாமன்னர்களின் வரிசையில் தமிழ்நாட்டின் இன்றைய மக்களாட்சி மன்னர் எங்கள் முதல்வர் பெயரும் நிச்சயம் இடம் பெறும். இது காலத்தின் கட்டாயம்.

  1. பெருந்திட்டப்பணிகள் வட மாநிலங்களில் மட்டும் தான் 200, 300 கோடி ரூபாயில் திருக்கோயில் பெருந்திட்டப்பணிகள் என்ற செய்தியை பார்த்திருப்போம், தற்போது நம் தமிழ்நாட்டில் பெரும் திட்டப்பணிக்கு, திருச்செந்தூரில் ரூ. 324 கோடி, பெரியபாளையத்தில், ரூ. 170 கோடி, திருவண்ணாமலையில், ரூ. 118 கோடி, இருக்கன்குடியில், ரூ. 109 கோடி, இராமேஸ்வரத்தில், ரூ. 105 கோடி, பழநியில், ரூ. 100 கோடி,
    வடலூரில், வள்ளலார் சர்வதேச மையத்திற்கு ரூ. 100 கோடி, திருத்தணியில், ரூ. 90 கோடி திருவேற்காட்டில், ரூ. 63 கோடி, சமயபுரத்தில், ரூ. 62 கோடி என்று தொடரும் திருப்பணி.

மக்களாட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டு வரலாற்றில் இவ்வளவு பெரும் தொகையில் திருப்பணிகள் நடந்ததாக வரலாறே இல்லை. பிற மாநிலத்தவரும் விழிகள் விரித்து, வியந்து பார்க்க வைத்த பெருமைக்கு முழு முதல் சொந்தக்காரர் நம் முதல்வர். என்னை புகழவேண்டாம் என்கிறார் முதல்வர். இது அரச கட்டளை. இந்து சமய அறநிலையத்துறை சாதனைகளைச் சொல்ல வேண்டியுள்ளது.இது ஆண்டவன் கட்டளை. இது புகழுரை அல்ல உண்மைக்கு எழுதப்படும் பொழிப்புரை.

  1. இராஜகோபுரங்கள்: தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்பவை இராஜகோபுரங்கள்.
    இம்மண்ணின் பெருமையை பறைசாற்றும் கோபுரங்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டன. இன்று நம் முதல்வர் ஆட்சியில் ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற இராஜகோபுரங்கள் கட்டப்படுகின்றன,நிறைவான திருப்பணிகள் எட்டப்படுகின்றன, அவை, சாதனைகளாக விண்ணை முட்டுகின்றன. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் 7 நிலை இராஜகோபுரம் உட்பட 6 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
    2022 – 23-ல் 7 திருக்கோயில்களுக்கு புதிய இராஜகோபுரங்கள் ரூ.36 கோடியில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9 நிலை இராஜகோபுரமும் ஒன்று. இது முடிவல்ல.
    இந்த ஆண்டும் புதியதாக இராஜகோபுரங்கள் கட்டுவதற்கு மூவேந்தர்கள் வழிவந்த நம் முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.
  2. திருமண விழா: கட்டணமில்லாத திருமணங்களை 04.12.2022 அன்று 31 இணைகளுக்கு தம்முடைய திருக்கரங்களால் நடத்தி வைத்தார், நம் முதல்வர். இந்த திட்டத்திற்கு ஒரு இணைக்கு ரூ.20,000 செலவிடப்பட்டது. தற்போது முதல்வரின் ஆணைக்கிணங்க ஒரு இணைக்கு ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 500 திருமணங்களும் நடந்தன. இத்திட்டம் இந்த ஆண்டும் தொடர செய்திருக்கின்றார் நம் முதல்வர். இருமனம் இணையும் திருமணம் ஏழைகள் இல்லத்தில் ஒளியேற்றுவது முதல்வரின் பெருங்குணம்.
  3. தங்க முதலீடு: தங்கத்தையே துருப்பிடிக்க வைக்க முயற்சித்தது கடந்த ஆட்சி, அதை முறைப்படி உருப்படியாக்கியது நம் தங்க மகன் தளபதி ஆட்சி. தெய்வங்களுக்கு காணிக்கையாக வந்த, பயன்படுத்த இயலாத பலமாற்றுப்பொன் இனங்களை மூட்டைகளாக கட்டிப்போட்டு முடக்கி வைத்திருந்தது கடந்த ஆட்சி,
    முடங்கி கிடந்த இந்த திட்டத்தை முடுக்கி விட்டதால் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வட்டி வருவாய் கிடைக்கிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால் ஆண்டிற்கு ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுக்கப் பார்த்தார்கள் இந்த திட்டத்தை!
சுமத்தப் பார்த்தார்கள் இந்து விரோதி பட்டத்தை!
வளைக்கப் பார்த்தார்கள் சட்டத்தை!
இறுதியாய் நம் முதல்வர் வென்று அடக்கினார் அவர்களின் கொட்டத்தை!

  1. திருத்தேர்: கலைஞர் என்றால் திருவாரூர், திருவாரூர் என்றால் ஆழித்தேர், அன்று ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர். 87 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் தேரையும், 80 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சீட்டணஞ்சேரி அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவில் தேரையும் வீதியுலா வர வைத்தவர் நம் முதல்வர். இவ்வாறு 2 ஆண்டுகள் முதல் 87 ஆண்டுகள் வரை ஓடாமல் இருந்த 15 திருத்தேர்களை ஓட வைத்தவர் நம் முதல்வர் ரூ.18 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திருத்தேர்கள் உருவாக்கும் பணியும், ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 13 திருத்தேர்கள் மராமத்துப்பணியும் தற்போது நடைபெற்று வருகின்றன.ஆரூரில் தேரோட்டம் கலைஞரால் அனைத்து ஊரிலும் தேரோட்டம் நம் முதல்வரால்!
  2. அர்ச்சகர் நலன்: கோயில்களுக்கும், பக்தர்களுக்கும் மட்டும் அல்ல அர்ச்சகர் நலனிலும் அக்கறை கொண்டுள்ள அரசு நமது அரசு. அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு, தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு கட்டணத்தில் 60% பங்கு தொகை, தைத்திருநாளில் புத்தாடை, ஓய்வூதிய உயர்வு, ஊக்கத் தொகை, இப்படி அர்ச்சகர் நலன் காக்கும் அரசு நம் அரசு. வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் ஏன் இவருக்கு வாக்களிக்க தவறி விட்டோம் என மனம் வருந்துகின்ற அளவிற்கு எங்கள் பணி தொடரும் என்று முதல்வர் கூறியதை இங்கு நான் சுட்டிக் காட்டுகிறேன்.

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்போம்
என்றார் அறிஞர் அண்ணா.
எங்கள் முதல்வரின் சாதனையால்
ஏழைகள் சிரிக்கிறார்கள் !
இறைவன் மகிழ்ச்சியுறுகிறார் !

  1. இராமேசுவரம் – காசி ஆன்மிகப்பயணத் திட்டம். தி.மு. கழக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இந்த ஆண்டு அரசு மானியத்தில் ரூ.50 இலட்சம் செலவில் 200 பக்தர்கள் மகிழ்ச்சியுறும் வகையில்,
    இராமேசுவரம் – காசி ஆன்மிக பயணம் அழைத்து சென்று வந்த அரசு தமிழ்நாடு அரசு. எப்போதும் போல் தமிழக அரசு இதிலும் முன்னோடி, ஒன்றிய அரசு நமக்கு பின்னாடி. இந்த பயணம் வரும் ஆண்டும் தொடரும்.
  2. எளிய மக்களுக்கான இறைப்பணி: ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி நிதியை முதன் முதலில் 1997-ம் ஆண்டு அறிவித்து மாபெரும் ஆன்மிகப் புரட்சிக்கு வித்திட்டவர் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு ரூ.1 இலட்சமாக இருந்ததை ரூ.2 இலட்சமாக உயர்த்தி, 2,000 திருக்கோயில்கள் என்று இருந்ததை 2,500 திருக்கோயில்கள் என எண்ணிக்கையை உயர்த்தி, ஒரே தவணையில் 2,500 திருக்கோயில்களை சார்ந்த அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் அனைவரையும் ஒன்றாக வரவழைத்து, தம்முடைய திருக்கரங்களாலேயே தலா ரூ.2 இலட்சம் வீதம் ரூ.50 கோடியை வாரி வழங்கி கலைஞர் தொடங்கிய இத்திட்டத்தில் தனி முத்திரை பதித்துள்ளார் நம் முதல்வர். கடவுளின் சன்னிதானங்கள் சமத்துவ புரங்களாக திகழ வேண்டும் என்று எண்ணிய இராமானுஜரின் ஆன்மிகமே எங்கள் முதல்வரின் ஆன்மிகம்.

13.ஆன்மிக ஆன்றோர்களுக்கு சிறப்பு செய்தல்
*18 சித்தர்களில் 3 சித்தர்களுக்கு முத்தான விழா

  • திருமுறை கண்ட சேக்கிழாருக்கு 3 நாட்கள் அரசு விழா.
  • தமிழ் பெருமாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் மற்றும் 3 நாட்கள் அரசு விழா.
    *அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை கண்ட வள்ளலாருக்கு சரித்திர புகழ்மிக்க சர்வதேச மையம்,
    மாநிலம் எங்கும் ஆண்டு முழுவதும் அன்னதானம்
    முப்பெரும் விழாவிற்கான செலவு ரூ.3.25 கோடியை அரசே ஏற்றது.
    அழகர் கோயிலில் பெரியாழ்வாருக்கு திருவரசு,
    நெம்மேலியில் ஆளவந்தாருக்கு திருவரசு,
    இப்படி ஆன்மிக ஆன்றோர்களை ஆராதிக்கும் அற்புத அரசு நம் அரசு.
    இறைத் தொண்டர்களுக்கெல்லாம் சிறப்பு செய்யும் பெரும் தொண்டர் நம் முதல்வர்.

14.அன்னதானம் / பிரசாதம்: மணிமேகலையின் கையில் இருந்த அட்சய பாத்திரம் பசிப்பிணி போக்கியது, முதல்வர் உத்தரவினால் அன்னதான திட்டம் என்ற அட்சய பாத்திரம் இன்று எல்லா தரப்பு மக்களின் பசிப்பிணி போக்குகிறது. 756 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம், 8 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம், பழநிக்கு திருவிழா காலங்களில் பாதயாத்திரையாக வரும் இரண்டு இலட்சம் பக்தர்களுக்கு அன்னதானம், அருள்மிகு, நெல்லையப்பர் திருக்கோயில் திருவிழாக் காலங்களில் 30,500 பக்தர்களுக்கு அன்னதானம், பழநி திருக்கோயில் சார்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் நான்காயிரம் மாணவச் செல்வங்களுக்கு காலைச் சிற்றுண்டி, இவ்வாறு நமது ஆட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் திட்டங்களோடு, இந்த ஆண்டும் புதிய அன்னதான திட்டப்பட்டியல் தொடரும். பக்தி பசியோடு, வயிற்று பசியையும் தீர்க்கும் வள்ளலாரின் ஆன்மிகக் கொள்கையே நம் முதல்வரின் கொள்கை.

  1. நிலம் மீட்பு: இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்புள்ள நிலம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 3,177 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதை ஒப்பிடுகையில் அவர்கள் ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பை விட 1,085 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,401 ஏக்கர் நிலத்தை கூடுதலாக இரண்டே ஆண்டுகளில் மீட்டுள்ளோம். நம் முதல்வர் வேட்டி கட்டி நடந்து வரும் திருவாரூர் தேர்
    வீழ்த்தவரும் பகை கண்டால் அவர் துள்ளி வரும் திருச்செந்தூர் வேல். இந்த நில மீட்பு வேட்டை என்பது தொடரும், தொடரும்.
  2. கோவில் வழிபாடுகளில் சமத்துவமும், சமூக நீதியும்: வைக்கம் ஆலய நுழைவு நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் வைக்கம் வீரர் பெரியாரின் வாரிசு ஆட்சி இது என்பதை நிரூபிக்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர், அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் 80 ஆண்டு காலமாக ஒரு பிரிவினர் இறை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் அனைவரையும் இறை தரிசனம் செய்ய வைத்து சமூக நீதியை நிலை நாட்டியவர் நம் முதல்வர். இது போன்று 5 திருக்கோயில்களில் ஒரு பிரிவினரை இறை தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையை தகர்த்தெறிந்து அனைவரையும் தரிசிக்க வைத்தவர் நம் முதல்வர்.
  3. தமிழையும், சமயத்தையும் தம்மிரு கண்களாகப் போற்றி வளர்ப்பது நமது இந்து சமய அறநிலையத்துறை: அன்னைத் தமிழில் வழிபாடு செய்ய ஏதுவாக 14 இறைவன் போற்றி பாடல் நூல்கள் வெளியிட்டவர் நம் முதல்வர், கரையான் அரிக்காமல் ஓலைச் சுவடிகளை நூலாக்கினார் தமிழ் தாத்தா உ.வே.சா, 108 அரிய நூல்களை பதிப்பித்து தமிழரின் சொத்தாக்கினார் முத்துவேலரின் பேரன் நம் முதல்வர்.

முதல்வர் வென்று விடுவார்
இல்லை என்ற சொல்லை
இல்லை என்ற சொல்லே
இனி தமிழ்நாட்டில் இல்லை
சாதனை பல நூறு தினம் தினம் தந்தார்
திராவிட ஆட்சியிலும் பக்தி மணம் தந்தார்

  1. திசையெங்கும் விண்முட்டும் கோபுரங்கள் தந்தார்
  2. பலநூறு கோயில்களுக்கு குடமுழுக்கு தந்தார்
  3. திருவிளக்குப் பூஜை என்ற பெருவிளக்கு தந்தார்
  4. பெருந்திட்ட திருப்பணிக்கு ஆயிரம் கோடி தந்தார்
  5. தொன்மையான கோயிலுக்கு நூறு கோடி தந்தார்
  6. அன்னையாக பசி தீர்க்கும் அன்னதானம் தந்தார்
  7. சித்தர்கள் சிறப்புக்கு சொல் மண்டபம் தந்தார்
  8. ஒளவை பிராட்டிக்கு மணி மண்டபம் தந்தார்
  9. வள்ளலாரின் புகழ் பாடும் உயர் மையம் தந்தார்
  10. திருத்தேர்கள் பல கண்டு தேரோட்டம் தந்தார்
  11. திருக்குளங்கள் அருள் சுரக்கும் நீரோட்டம் தந்தார்
  12. அனைத்து சாதி அர்ச்சகர் எனும் ஜனநாயகம் தந்தார்
  13. பெண்களும் ஓதுவார்கள் எனும் பெரும்புரட்சி தந்தார்
  14. கோயில் நிலம் மீட்கும் பெருந்துணிவு தந்தார்
  15. ஓலைச் சுவடி ஆய்வு மையமும் தந்தார்
  16. கோயில்கள் எங்கும் நந்தவனம் தந்தார்
  17. தலமரக்கன்று ஒரு இலட்சம் தந்தார்
  18. சூரிய வெப்ப விளக்குகள் தந்தார்
  19. ஒருகால பூஜை என்னும் உயர் காலம் தந்தார்
  20. அந்த கோயில்களுக்கு மின்கட்டணமும் தந்தார்
  21. கோபுரமெங்கும் இடிதாங்கி தந்தார்
  22. அர்ச்சகர் மனம் குளிர குடியிருப்பு தந்தார்
  23. பழநி மாணவருக்கும் சிற்றுண்டி தந்தார்
  24. பொன்னுருக்கி வைப்பு நிதியாக்கி தந்தார்
  25. இராமேஸ்வரம் காசிக்கு நற்பயணம் தந்தார்
  26. 500 இணைகளுக்கு சீரோடு திருமணத்தை நடத்தி தந்தார்
  27. மகா சிவராத்திரி அருள் சாற்றித் தந்தார்
  28. 108 அரிய நூல்கள் பதிப்பித்துத் தந்தார்
  29. 108 வாகனங்கள் துறைக்காகத் தந்தார்
  30. திருத்தேர்கள் பாதுகாக்கப் பெருங்கூரை தந்தார்
  31. தேசம் கடந்த தெய்வச் சிலைகளை மீட்டெடுத்து தந்தார்
  32. நிலம் புதைந்த சிலைகளை கண்டெடுத்து தந்தார்
    இப்படியாக திருக்கோயில் மேம்பாடு தொடர்ச்சியாகத் தந்தார்
    புதுமைகள் தந்தார்
    புரட்சிகள் தந்தார்
    பக்தருக்கெல்லாம் நிம்மதி தந்தார்
    மொத்தத்தில் முதல்வர்
    சீரும் சிறப்பும் ஒருசேரத் தந்தார்
    முதல்வரின் சாதனைகள் ஆயிரமோ ஆயிரம் மொத்தமாகச் சொல்ல வந்தால் பொழுதெல்லாம் போயிரும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button