துபாய், புர்ஜ் கலீஃபாவை நேசிப்பதற்காக வைரலான சிறுவனை ஷேக் முகமது சந்தித்தார்!

ஜூலை மாதம், குவைத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பத்ர் வைரலானார், அதில் அவர் புர்ஜ் கலீஃபாவைப் பார்க்க துபாய் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சிறுவனின் வீடியோவைப் பகிர்ந்து, துபாய் வழங்கும் அற்புதமான காட்சிகளை அனுபவிக்க வருமாறு சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் அழைத்தார்.
மேலும், “பத்ரை யாருக்காவது தெரிந்தால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் துபாய், புர்ஜ் கலீஃபா மற்றும் அதன் மற்ற அழகான காட்சிகளைப் பார்க்க வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன் என்று சொல்லுங்கள்.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சிறுவன் பத்ர் சமீபத்தில் துபாய்க்கு பயணம் செய்ததன் மூலம் தனது கனவை நனவாக்கினார், அதோடு அமீரகத்தின் ஆட்சியாளரைச் சந்தித்தார்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், பத்ர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. ஷேக் முகமது சிறுவனின் கையை தன் கையில் பிடித்தபடி பத்ர் மற்றும் அவனது சகோதரனுடன் ஆழமாக உரையாடுவதைக் காணலாம்.
மற்றொரு புகைப்படத்தில், குழந்தைகள் ஆட்சியாளரின் இருபுறமும் அமர்ந்துள்ளனர். பத்ர் ஷேக் முகமதுவிடம் சௌகரியமாக இருப்பது போல் தெரிகிறது.