டெர்னாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை எட்டக்கூடும்

பேரழிவு வெள்ளத்தின் விளைவாக லிபிய நகரமான டெர்னாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை எட்டக்கூடும் என்று டெர்னாவின் மேயர் தெரிவித்தார். வெள்ளத்தால் அழிந்த மாவட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை உள்ளது என்று கூறினார்.
6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், 30,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் , குறிப்பாக கிழக்கு நகரமான டெர்னாவில், அழிந்த தெருக்களில் உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டிருந்த நிலையில், லிபியா பெரும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் இந்த செய்தி வெளி வந்துள்ளது .
செப்டம்பர் 9, சனிக்கிழமை இரவு முதல், மத்தியதரைக் கடலில் இருந்து இப்பகுதிக்கு வந்த டேனியல் புயலின் விளைவாக, கிழக்கு லிபியா மற்றும் பசுமை மலைப் பகுதிகள் பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் அடைமழையைக் கண்டன.
டேனியல் புயல் இரண்டு அணைகள் இடித்து, டெர்னாவைக் கிழித்து, கட்டிடங்களையும் அவற்றுக்குள் இருந்த மக்களையும் துடைத்தெறிந்தது. நீர் பெருக்கத்திற்குப் பிறகு டெர்னாவின் செயற்கைக்கோள் படங்கள் கடலோர சுற்றுப்புறங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.
உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவாக 10 மில்லியன் டாலர்களை ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது. லிபிய தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் அப்துல் ஹமித் அல்-தபைபா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகராட்சிகளின் துயரமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பத்து நாட்களுக்கு அடிப்படை மற்றும் இடைநிலைக் கல்வி நிலைகளில் படிப்பை நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை அறிவித்தார்.


