ஜிம்பாப்வேவில் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் தேதிகளில் நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு நேற்று நள்ளிரவு முடிவுகள் வெளியானது.
இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- “அவசரமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை நாங்கள் நிராகரிக்கிறோம். தேர்தல் 23-ந்தேதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் அதிபர் தேர்தல் முடிவு நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.


