டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறியது.
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. அதிக அனுபவம் இல்லாத ஸ்காட்லாந்து அணி வலிமையான ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளித்து 180 ரன்கள் குவித்ததை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டினர்.
அந்த அணியின் முன்சே 35 ரன்களும், பிரான்டன் மெக்கல்லம் 34 பந்துகளில் 60 ரன்களும், கேப்டன் பெரிங்டன் 42 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா ஹெட் மற்றும் ஸ்டோனிஸ் அதிரடியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட் 49 பந்துகளில் 68 ரன்களும், ஸ்டாய்னிஸ் 29 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 8 புள்ளிகளுடன் குரூப்-பி பிரிவில் முதலிடம் பிடித்தது.