Site icon Tamil Gulf

புத்தர் ஆவது சுலபம்… ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் சுலபம்… ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

வரலாறு பெரும்பாலும் பேசுவது வெளிப்படையான தியாகங்களைப் பற்றி. ஆனால் மௌனமாகச் சுமக்கப்படும் வலிகள் கண்களில் படாமல் போய்விடுகின்றன. புத்தரின் ஞானப் பயணத்தை நாம் போற்றினாலும், அதே பயணத்தின் மறுபுறத்தில் யசோதரா அனுபவித்த துறவுத்தனத்தை அரிதாகவே நினைக்கிறோம். அந்த மறக்கப்பட்ட தியாகத்தை நினைவூட்டும் சிந்தனைதான் இந்தக் கதை.

புத்தர்  மனைவியாய் இருப்பது கடினம்…

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளை நேராகப் பார்த்தார். அவள் கண்களில் இருந்த வலி, கோபம், ஏக்கம் அனைத்தையும் உணர்ந்தார். அமைதியாக அவளிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு மெதுவாகச் சொன்னார்—
“நான் பயந்தது உன்னிடம் இல்லை. உன் அன்பிலும், உன் தியாகத்திலும் அல்ல. உண்மையில் நான் பயந்தது என்னிடமே. உன் கண்களில் என் பலவீனம் தெரிந்துவிடுமோ, என் மனம் தளர்ந்துவிடுமோ, நான் எடுத்த முடிவிலிருந்து வழுவிவிடுவேனோ என்ற பயம்தான் என்னை ஓடச்செய்தது.”

அவள் அருகில் இருந்திருந்தால், அவளின் அன்பும், குழந்தையின் முகமும், அரண்மனையின் சுகமும் தன்னை மீண்டும் கட்டிப்போடிவிடும் என்ற அச்சம் அவனை துரத்திக்கொண்டே இருந்தது. அதனால் அவளை விட்டு சென்றது அவளின் குறையால் அல்ல; தன்னுள் இருந்த உறுதியின்மையும், பயமும் தான் அதற்குக் காரணம் என்பதை அவர் நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா… ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது… அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.? புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் “அப்பா எங்கே” எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

நெறிப்பாடம் (Moral):

துறவுத்தனம் என்பது விலகிச் செல்லுவதில் அல்ல; விலக முடியாத சூழலிலும் பொறுப்பை சுமந்து வாழ்வதில்தான் அதன் உண்மை அர்த்தம் இருக்கிறது. வெளிப்படையாகத் தெரியும் தியாகங்களைப் போற்றும் நாம், மௌனமாகத் துன்பங்களைத் தாங்கும் மனிதர்களின் தியாகத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Exit mobile version