Site icon Tamil Gulf

4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

NASA and SpaceX launch falcon9

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன. இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் 6 மாத பணிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக புதிய விண்வெளி வீரர்கள் குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நாசா மேற்கொண்டது.

அதன்படி அமெரிக்கா, ஜப்பான், ரஷியா மற்றும் டென்மார்க்கை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட்டில் நேற்று முன்தினம் விண்வெளிக்கு புறப்பட இருந்தனர். ஆனால் விண்கலத்தை ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் விண்வெளி பயணம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதனை தொடர்ந்து, டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது. அந்த விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த 4 விண்வெளி வீரர்களும் 6 மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள்.

Exit mobile version