ஹிலாரி சூறாவளி… கடுமையான சேதங்கள் உண்டாக இருப்பதாக வானிலை மையம் தகவல்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் (மணிக்கு 225 கி.மீ.) வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4வது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர். இதனால் தென்மேற்கு அமெரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை கடும் புயல் காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இது நாளை, நாளை மறுநாள் மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயல் காரணமாக கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. சூறாவளி மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க மண்மூட்டைகளை அடுக்கியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சமாளிக்க ஜெனரேட்டரையும் தயார் செய்து வருகின்றனர்.