விண்வெளியில் இருந்து எடுத்த காஸாவின் படங்களைப் பகிர்ந்து அமைதிக்கு அழைப்பு விடுத்த சுல்தான் அல்நெயாடி!!

_ஐக்கிய அரபு எமிரேட் விண்வெளி வீரர் சுல்தான் அல்நேயாடி அமைதிக்கு அழைப்பு விடுக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு காசா பகுதியின் விண்வெளியில் இருந்து எடுத்த அற்புதமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “சொல்ல முடியாத வலி மற்றும் அழிவை அனுபவிக்கும் இடம்” என்று அவர் எழுதி ட்வீட் செய்துள்ளார்.
விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்ட முதல் அரபு விண்வெளி வீரர் என்ற வரலாற்றை படைத்த அல்நேயாடி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆறு மாதங்கள் தங்கியிருந்த போது விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சிகளை கைப்பற்றினார்.
அந்தவகையில், பூமிக்கு மேலே 400 கிமீ உயரத்தில் இருந்து அல்நேயாடி எடுத்த காசாவின் பிரமிக்க வைக்கும் படங்கள் நகரம் மற்றும் மத்தியதரைக் கடலின் அமைதியான கிழக்கு கடற்கரையைக் காட்டுகின்றன.
அல்நேயாடி பதிவில் குறிப்பிடுகையில், “நிலத்தில் (காசா) காட்சிகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் அமைதியை விரும்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
காஸாவின் நிலைமை, சண்டைக்கு முன்பே கவலைக்கிடமாக இருந்தது, தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. 9,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் கூறுவதால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையாகி மருத்துவ சேவைகள் சரிந்து வருகின்றன.