பள்ளியின் முதல் நாளை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு தினமாக அறிவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!!

துபாயில் ஆகஸ்ட் 28 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதன் காரணமாக பள்ளி திறக்கப்படும் நாளில் விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ‘விபத்துகள் இல்லாத நாள்’ என்ற தலைப்பின் கீழ் அதிகாரிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, எமிரேட்ஸ் டிரான்ஸ்போர்ட்டில் இருந்து 217 ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியான விரிவுரைகளை ஏற்பாடு செய்தனர்.
‘விபத்துக்கள் இல்லாத நாள்’ என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்தின் தலைமையிலான தேசிய அளவிலான பிரச்சாரமாகும். உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து, பள்ளியின் முதல் நாளை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து, துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பொதுத் துறையின் இயக்குநர் பிரிக் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் கூறுகையில், “விழிப்புணர்வு, வாகன ஓட்டிகளின் ஓட்டும் திறனை மேம்படுத்துதல், உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இறுதி இலக்கு. போக்குவரத்து அடையாளங்களை கடைபிடிப்பது, எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை கடைபிடிப்பது, சீட் பெல்ட் அணிவது, நியமிக்கப்பட்ட பாதைகளில் செல்வது, அங்கீகரிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்ப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களை அவர் கேட்டுக்கொண்டார்.