தொழில்நுட்பக் கோளாறால் மின்சாரம் துண்டிப்பு- ஷார்ஜா பகுதி மக்கள் அவதி

ஷார்ஜாவின் எரிவாயு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நேற்று பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஷார்ஜாவில் உள்ள அல் மஜாஸ், அல் நஹ்தா, முவைலா மற்றும் அல் தாவுன் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மின்வெட்டை எதிர்கொண்டனர். இது குறித்து ஷார்ஜா மீடியா அலுவலகம் கூறுகையில், தற்போது மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டு, கோளாறு சரி செய்யப்பட்டது.
“ஷார்ஜாவில் உள்ள சாஜா பகுதியில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஷார்ஜா நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறைபாடு சரிசெய்யப்பட்டு படிப்படியாக மின்சாரம் திரும்பியுள்ளது” என்று ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
பின்னர் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சஜா ஆலையில் இருந்து மின் நிலையங்களுக்கு பாயும் எரிவாயு துண்டிக்கப்பட்டது. எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்புக் குழுக்களின் உதவி மூலம் ஷார்ஜா நகரின் பகுதிகளில் விரைவாக மின்சாரத்தை மீட்டெடுக்க முடிந்தது” என்று ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஷார்ஜாவின் சாஜா பகுதியில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையத்தின் நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு குழாய்களின் வால்வுகள் மூடப்பட்டன. இதனால் குடியிருப்பாளர்கள் ஏர் கண்டிஷனிங், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தண்ணீர் பம்புகளுக்கு மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.