எமிராட்டி மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 28-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. எமிராட்டி மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் எமிராட்டி பெண்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பெண்களை நாட்டின் “அடித்தளம்” என்று அழைத்தார். X வலைத்தளத்தில் அவர் கூறியதாவது:-
“உங்கள் பங்கு இந்த மண்ணின் அடித்தளம், உங்கள் லட்சியம் வானம். ஒவ்வொரு ஆண்டும், உங்களைப் பற்றியும் எங்கள் தாயகத்தைப் பற்றியும் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமும் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறுகையில்:-
“எமிராட்டி மகளிர் தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம், அணிவகுப்பின் பங்காளி, தலைமுறைகளை உருவாக்கியவர், தியாகிகளின் தாயார், சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஒவ்வொரு ஆண்டும், நீங்கள் வலிமையாகவும், அழகாகவும், சிறப்பாகவும் இருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும், எங்கள் நாடு உங்கள் சாதனைகளையும் சிறப்பையும் கொண்டாடுகிறது. கடவுள் உங்களைப் பாதுகாத்து, நம் நாட்டிற்கான பெருமை, நன்மை, ஒற்றுமை மற்றும் அன்பை நிலைநிறுத்தட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.