உலக பேட்மிண்டனில் முதல்முறையாக பதக்கம் வென்ற பிரனாய்!

டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்செட்டை தன்வசப்படுத்தி பிரமாதமான தொடக்கம் கண்ட பிரனாய் அடுத்த 2 செட்களில் எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். 1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்தார். இருப்பினும் பிரனாய் வெண்கலப்பதக்கத்தை தன் வசப்படுத்தினர்.
உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



